
சிறுமி ஹிஷாலினி விடயத்தில் ரிஷாத் பதியுதீனை காப்பாற்றும் சதித் திட்டங்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் உள்ளதாகவும், ஆனாலும் சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில் தற்போது முன்னெடுக்கும் விசாரணைகளின் சுயாதீனத்தை பாதுகாக்க நாம் துணை நிற்போம் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஹிஷாலினி விடயத்தில் அவரது மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில் அரசாங்கமாக பின்னணியில் நாம் இருப்போம்.இந்த நாட்டில் மேலும் பல ஹிஷாலினிகள் உருவாகக்கூடாது என்பதற்காகவும்,எந்தவொரு பெண் பிள்ளையும் இவ்வாறு வேதனைப்படக்கூடாது என்பதற்காகவும்,வீட்டுப் பணிகளுக்கு இவ்வாறு சிறுவர்களை இணைப்பதில் அச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த விசாரணையின் சுயாதீனத்தை பாதுகாப்போம்.
இந்த சிறுமியின் விடயத்தில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 நாட்களும் ஏதோவொரு அழுத்தங்கள் இருந்துள்ளன.சஹரான் விடயத்தில் இடம்பெற்ற சதித் திட்டமே இங்கேயும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இனியும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாது என நாம் வாக்குறுதியளிக்கின்றோம்.
இந்த விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்படுகின்றது என்பது சகலருக்கும் இப்போது விளங்கியிருக்கும்.ரிஷாத் பதியுதீனை அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக் கொள்வதாக இருந்தாலோ அல்லது அவருடன் டீல் அரசியல் செய்வதாக இருந்தாலோ இன்று அவர்களை குடும்பத்துடன் கைது செய்திருக்க மாட்டோம்.
இதற்கு முன்னைய காலங்களிலும்,நல்லாட்சி காலத்திலும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நானே அதிகளவில் முறைப்பாடுகளை செய்துள்ளேன்.இந்த நாட்டில் உருவாகியுள்ள மிக மோசமான அரசியல்வாதி ரிஷாத் பதியுதீன் என்பதே எனது கருத்தாகும்.அதில் நான் உறுதியாக உள்ளேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.