October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியை பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளது என்கிறார் தயாசிறி ஜெயசேகர

அரசாங்கத்திற்கு எதிரான அலையொன்று உருவாகி வருகின்றது.இதனை எதிர்க்கட்சியினர் கையாளும் விதம் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியுள்ளதுடன், நிலைமைகளை தெளிவுபடுத்தினோம்.இவ்வாறான நிலையில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பாதுகாக்க வேண்டுமே தவிர,அரசாங்கத்தை விட்டு வெளியேற எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தில் எமக்கு இடம் மறுக்கப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியுடன் பேசினோம்.அதேபோல் நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள்,அரசியல் நெருக்கடி நிலைமைகள் குறித்தும் பேசினோம்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியது.

எமது மக்களுக்கான பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீதான நம்பிக்கையில் கட்சியாக நாம் அவரை ஆதரித்தோம்.அந்த நம்பிக்கையை ஜனாதிபதி காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கத்திற்குள் நெருக்கடி நிலைமைகள் உள்ளது.ஆட்சியை முன்னெடுத்து செல்வதில் பல மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியுள்ளோம்.குறிப்பாக அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் எமக்கு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது என்பதை தொடர்ச்சியாக முன்வைத்தோம்.எமது கீழ்மட்ட உறுப்பினர்கள் தொடக்கம் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என சகலரையும் பாதுகாக்கும் விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளோம்.

அதற்கு அவர் முழுமையாக செவிமடுத்து எம்முடன் இணைந்து மாற்று வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.

கட்சியை பலப்படுத்த வேண்டும்.அதேபோல் அரசாங்கத்தை உருவாக்கிய கட்சியாக எமது இருப்பை தக்கவைக்க வேண்டும். அதையும் தாண்டி தேசிய பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பேசியுள்ளோம்.அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையொன்று உருவாகிக் கொண்டு வருகின்றது.அதனை நாம் எடுத்துக் கூறியுள்ளோம்.இதனை எதிர்க்கட்சியினர் பயன்படுத்தும் விதத்தையும் தெளிவுபடுத்தினோம்.இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே அரசாங்கத்தை விட்டு வெளியேற எந்த தீர்மானமும் இல்லை. ஜனாதிபதியை பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளதால் அவரை கைவிட மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.