November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட்டுவாகலில் காணி அபகரிக்க முயற்சி; தடுக்க ஒன்று திரளுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு

வட்டுவாகலில் காணி அபகரிக்க இராணுவம் முயற்சி செய்துவரும் நிலையில்,அதனை எதிர்க்க அனைவரும் எதிர்வரும் வியாழக்கிழமைமை (29) ஒன்று திரண்டு முன்வரவேண்டும் என எம். கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது.
வடக்கு,கிழக்கிற்கு வெளியிலும் கொழும்பு துறைமுக நகர தி்ட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்கள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள பழைய கச்சேரி கட்டிடம் விற்பனை செய்ய முயற்சிகள் இடம்பெறுகின்றன.குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை ஆகிய இடங்களை புத்த விகாரை இருந்ததாக கூறி அதனைச் சூழ உள்ள பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இந்த அபகரிப்புகள் வடக்கு,கிழக்கை திட்டமிட்டு துண்டிக்கும் நடவடிக்கைகளே.வாகரையிலும் 500 ஏக்கருக்கு மேல் கடற்படை பிடித்து வைத்துள்ளது.

தமிழர் ஒரு தேசிய இனம்.இந்த நில அபகரிப்பை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.12,000 கோடி பெறுமதியில் இலவசமாக தீவகத்தில் சூரிய மின்கலமும் காற்றாலை மூலமும் மின் உற்பத்தியை மேற்கொள்ள இந்தியா முன்வந்திருந்தது.ஆனால் இதுவரை அமைச்சரவை அனுமதி வழங்காது சீனாவின் கடன் திட்டத்தில் மேற்கொள்ள அரசாங்கம் முயல்கிறது.

பூநகரியில் 16 பேருக்கு தற்போது மீன்பிடி அமைச்சரால் கடலட்டை பண்ணை அமைக்க இடம் கொடுக்கும் முயற்சிகள் இடம் பெறுகிறது.
இது சீனாவிற்கு கடலட்டை பண்ணையை வழங்கிய விவகாரத்தை திசை திருப்பும் ஒரு முயற்சி.

வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணியை நில அளவை மேற்கொண்டு அபகரிப்பதற்காக காணி உரிமையாளர்கள்
அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளை சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.

கொரோனாவை பயன்படுத்தி இராணுவ நில அளவையாளர்கள் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.காணிச் சுவீகரிப்பை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.