January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் நோயாளர்களால் ஒட்சிசன் தேவை அதிகரிப்பு!

இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கு மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்ட படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அத்தோடு, கொவிட் தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சையின் போது ஒக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாட்களாக 1500 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

முன்பைவிட இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் நோயாளிகள் பதிவாகும் நிலையில், இதில் “டெல்டா”  வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20% முதல் 30% வரை உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, நாட்டில் கடந்த சில நாட்களாக மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலைமை பதிவாகி வருவதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.

இதனிடையே நேற்று, கம்பஹா மாவட்டத்திலிருந்து 268 கொவிட் தொற்றாளர்களும் கொழும்பில் இருந்து 273 கொவிட் தொற்றாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 293 கொவிட் தொற்றாளர்களும் இனங் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, மேல் மாகாணத்தில் நேற்று (26) பதிவான தினசரி கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 834 ஆகும்.

அத்தோடு, யாழ்.மாவட்டத்தில் 149 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 132 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கண்டியில் 76 பேரும், இரத்தினபுரியில் 67 பேரும், மாத்தளையில் 54 பேரும், காலியில் 52 பேரும் நேற்று (26) பதிவான கொவிட் தொற்றாளர்களிடையே அடங்குகின்றனர்.