சேதன விவசாய முறையில் வெற்றிகொள்வதற்கு நாடுகளின் கூட்டு முயற்சி அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மாநாட்டில் இணையவழியாக உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இரசாயன முறையிலான விவசாயத்திற்கு பதிலாக இலங்கை எடுத்துள்ள சேதன முறை விவசாயத்துக்கு உலக நாடுகள் ஆர்வம் காட்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உணவு மனிதனின் அடிப்படை உரிமை என்றும் அரசாங்கம் மக்களின் இந்த உரிமையைப் பாதுகாக்க செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய உணவு பாதுகாப்பில் காணப்படும் நெருக்கடிகள் குறித்து விரிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பல்லாண்டு காலமாக பாரம்பரிய முறையுடன் பிண்ணிப்பிணைந்த விவசாய மரபுரிமை இலங்கையில் காணப்படுவதால், சேதன பசளையிலான விவசாய முறை புதியதொன்று அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றங்களை குறைத்தல், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை பலப்படுத்தல், மற்றும் உயிரியல் பல்வகைமையை மேம்படுத்தல் போன்றன குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.