இலங்கையில் தயாரிக்கப்படும் சேலைன் உட்பட ஊசிமருந்து திரவங்களை அரசாங்கத்திற்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களுக்கு தேவையான ஊசிமருந்துத் திரவங்களை வரையறுக்கப்பட்ட கெலூன் லயிப் சயன்சஸ் தனியார் கம்பனியிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக ஒப்பந்தத்தை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுவான சேலைன், டெக்ஸ்ரோஸ் திரவம், பாட்மான் திரவம் மற்றும் மெனிடோல் திரவம் உள்ளிட்ட இரத்த நாளத்தின் ஊடாக உட்செலுத்தும் 43 மில்லியன் ஊசிமருந்துத் திரவ போத்தல்களை வருடாந்தம் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலையொன்று பல்லேகலே பிரதேசத்தில் அமைப்பதற்கு அரச மருந்தாக்கல் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் வசதிகளை வழங்கியுள்ளது.
குறித்த தொழிற்சாலை மற்றும் அதன் உற்பத்திகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
அரச மருந்தாக்கல் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம், உள்நாட்டுக்கு தேவையான ஊசிமருந்து திரவங்களை இலங்கையில் உற்பத்தி செய்யும் கெலூன் லயிப் சயன்சஸ் தனியார் கம்பனியிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவுள்ளது.