அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் இவர்களின் போராட்டம் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதுடன், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இன்றைய தினத்தில் ஆசிரியர் சங்கங்களை சந்திப்பதற்கு பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதன்படி இன்று அலரி மாளிகையில் ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண, ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வை முன்வைப்பது கடினமானது என்றும், எவ்வாறாயினும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அவர்களின் கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார்.