July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நூறு நகரங்கள்’ திட்டத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மகிந்த!

‘நூறு நகரங்கள்’ திட்டத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக செயற்படும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குருநாகல் ஹிரிப்பிட்டி நகரில் நாளை (27) திறந்து வைக்கவுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய பிரதான நகரங்கள் மற்றும் பிரதேச நகரங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நாட்டின் 25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட உள்ளது.

‘நூறு நகரங்கள்’ திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு போதிய வசதிகள் அற்ற நகரங்களாக அடையாளம் காணப்பட்ட நாட்டின் 100 நகரங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு நகரத்திற்கு 20 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

நூறு நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி மற்றும் பூனகரி  நகரங்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மடம் மற்றும் வேலணை நகரங்களும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலி ஓயா நகரும் ‘நூறு நகரங்கள்’ திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.