உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக நுவரெலியா, திகன மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் மூன்று புதிய உள்நாட்டு விமான நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் ஐந்து சுற்றுலா வலயங்களில் உள்ள சீகிரியா, கொக்கல, அம்பாறை, அநுராதபுரம் மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய பகுதிகளில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே நுவரெலியாவில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்காக சீதா எலிய விதை உருளைக்கிழங்கு பண்ணை, சததென்ன மற்றும் கிரகெரி ஏரிக்கு அருகிலுள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
எனினும், குறித்த பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்தை நிர்மாணிப்பது பொருத்தமானதல்ல என்பதால் முன்மொழியப்பட்ட உள்நாட்டு விமான நிலையத்தை மற்றுமொரு பகுதியில் நிர்மாணிக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, அந்தப் பகுதியில் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், பண்டாரவளை உள்நாட்டு விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தின்படி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், திகன உள்நாட்டு விமான நிலையம் தொடர்பாக இலங்கை விமானப்படை அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் சீகிரியா, கொக்கல, அம்பாறை, அநுராதபுரம், ஹிங்குராங்கொட, கட்டுகுறுந்த, திருகோணமலை, வவுனியா, வீரவில மற்றும் புத்தளம் ஆகிய 10 விமான நிலையங்களில் இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் கீழ் உள்நாட்டு விமான நிலையங்களாக செயல்பட்டு வருவதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.