பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஆகஸ்ட் 9 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் மாமா மற்றும் சிறுமியை அந்த வீட்டுக்கு பணியாளராக அழைத்துச் சென்ற தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ரிஷாத் பதியுதீனின் வீட்டில் சிறுமிக்கு முன்னர் பணியாற்றிய 22 வயது யுவதியொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மைத்துனரையும் ஆகஸ்ட் 9 வரையில் விளக்க மறியலில் வைப்பதற்கு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்த இவர்கள் கடந்த சனிக்கிழமை நீதிமன்ற அனுமதியுடன் 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இன்றைய தினத்தில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்தனர்.
இதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், இறுதிக் கிரியையின் பின்னர் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.