மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
வை.எப்.சி அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பூனாட்சிகுளம், பண்டாரவெளி போன்ற பகுதிகளில் உள்ள அரச காணிகள் சிலரால் பலவந்தமாக அபகரிக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்தனர்.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த காணிகளை விடுவிக்கச் செய், ஏழை விவசாயிகளுக்கு காணிகளை பகிர்ந்து அளிக்கவும், காணி அத்துமீறலை உடனே நிறுத்து, அடாவடி காணி பிடித்தலை உடனடியாக நிறுத்தவும், அடாத்தாக காணி பிடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் என்று பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை முசலி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.