அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதும், அந்த திருத்தங்களையும் உள்வாங்கி சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையிலே திருத்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்படும் என்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்,
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் திருத்தங்கள் முன்வைக்கப்படமாட்டாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், இதனுடன் தொடர்புடைய திருத்தங்களில் மாற்றம் ஏற்பட்டால், அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடைபெறும். அத்துடன், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கேற்ப, குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீது எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன் 22 ஆம் திகதி இரவு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.