டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்த போது, எரிகாயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த தலவாக்கலை – டயகமவைச் சேர்ந்த 16 வயதான ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணம் தொடர்பில், ரிஷாட் பதியுதீன் எம்.பி.யிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன் திரும்ப எடுக்கப்பட்டபோது, பொலிஸார் இந்த விடயத்தை பி அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரை 36 க்கும் மேற்பட்டோரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டுக்கு வந்து செல்பவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.