சுகாதார வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல் சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதால் ‘ஆசிரியர் கொரோனா கொத்தணி’ உருவாகக் கூடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் டெல்டா மாறுபாடு பரவி வரும் நேரத்தில், இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை.எனவே அவர்கள் மத்தியில் புதிய கொத்தணி உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகவும் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிமை இருந்தாலும் இந்த போராட்டங்கள் அவர்களிடையே நோய் பரவுவதற்கு வழி வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற நிலை ஏற்பட்டால், குறித்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கும் தொழிற் சங்க தலைவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.