கொவிட் -19 வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பை காட்டுவதுடன், படிப்படியாக மீண்டும் அச்சுறுத்தலான நிலையொன்றை நோக்கி நகர்கின்றோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறும் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன, தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத நபர்களே அதிகளவில் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் மரணித்தும் உள்ளனர் என்கிறார்.
சுகாதார வைத்திய நிபுணர்கள் கூறுவதைப் போன்று நாட்டில் மீண்டும் கொவிட் -19 வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரையிலான தரவுகளின் படி,வரைபில் உயர்வு நிலையொன்றை காட்டுகின்றது.அப்படியென்றால் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்றே அர்த்தமாகும்.கடந்த காலங்களில் மக்கள் அச்சத்தின் மத்தியில் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டனர்.ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து மக்கள் விடுபட்டு வருகின்றமை இதற்கு பிரதான காரணமாகும்.
மேலும், தற்போது வரையில் அடையாளம் காணப்பட்டு வரும் கொவிட் தொற்றாளர்களில் அதிகமானோர்,எந்த வித தடுப்பூசியும் ஏற்றிக்கொள்ளாத நபர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
அதேபோல்,கடந்த 23 ஆம் திகதிக்கான கொவிட் மரணங்களாக 52 மரணங்கள் பதிவாகியுள்ளன.மரணித்தவர்கள் வயதானவர்கள், மற்றும் தடுப்பூசி ஏற்றாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆகவே மக்கள் விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.இலங்கையில் பயன்பாட்டில் உள்ள சகல தடுப்பூசிகளும் தரத்தில் சிறந்தவையேயாகும்.அனைத்துமே 90 வீதத்திற்கு அதிகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன.ஆகவே மக்கள் அச்சமின்றி தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.