January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஹிஷாலினிக்கு நீதி கிடைக்காவிட்டால் மலையக மக்களை இணைத்துக் கொண்டு கொழும்பில் குதிப்போம்’

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்காவிட்டால்,முழு மலையக மக்களையும் இணைத்துக் கொண்டு கொழும்பில் குதிப்போம்.எமது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இவ்வாறான கொடூரர்களை இலங்கையின் சட்டத்தால் தண்டித்து போதாது.சவூதி அரேபியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் கொடூரமான தண்டனையை இவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சிறுமி ஹிஷாலினியின் மரணம் எம்மால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாம் குரல் எழுப்பி வருகின்றோம்.இது அரசியல் சுயநலம் கருதியோ அல்லது இனவாதத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ இவ்வாறு நாம் கொந்தளிக்கவில்லை.இந்த நிலைமை ஹிஷாலினிக்கு ஏற்படலாம்,பாத்திமாவுக்கு ஏற்படலாம் அல்லது தம்மிக்காவுக்கு ஏற்படலாம்.

தமிழ் சிறுமியோ, சிங்கள சிறுமியோ அல்லது முஸ்லிம் சிறுமியோ யாராக இருந்தாலும் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது.யாருடைய வறுமையையும் பயன்படுத்திக் கொண்டு துஸ்பிரயோக செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது.

இப்போது விசாரணைகள் என கூறிக் கொண்டு யாரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது.இந்த விடயத்தில் இழுத்தடிப்பு இடம்பெற்றால் பின்னர் எம்மை கெட்டவர்கள் என கூற வேண்டாம். இவ்வாறு மோசமாக செயற்படும் கொடூரர்களை இலங்கையின் சட்டத்தால் தண்டித்து போதாது. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் மிக கொடூரமான தண்டனையை இவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.