ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பேச்சுவார்தையை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு கிடைக்க வேண்டிய அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதியுடன் பேச்சுவார்தையை நடத்த தீர்மானித்திருந்த போதும் பின்னர் அந்தப் பேச்சுவார்த்தை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.