
கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மறைவை அறிந்து தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவர் தமது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
திறமையான தொழிலதிபராக இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வணிக வலையமைப்பை பராமரித்து வந்த ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் அதனூடாக இலட்சக்கணக்கான மக்களுக்கு உறுதுணையாக விளங்கினார்.
சிரச, சக்தி, MTV ஆகிய ஊடக வலையமைப்பின் உரிமையாளராக மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் முன்நின்ற ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள், நமது நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலி துறையை நவீனமயப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.
மக்களுக்கு உண்மை செய்தியை வழங்குவதற்கும் மேலாக ‘கம்மெத்த’ போன்ற நிகழ்ச்சிகளின் ஊடாக கிராம மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்த ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள், ஒரு திறமையான தொழிலதிபராகவும் சமூக சேவையாளராகவும் இந்நாட்டிற்காக தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.
ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் பிரிவால் வாடும் அவரது மனைவி, புதல்வர் ஷஷீ ராஜமகேந்திரன், புதல்விகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கெப்பிடல் மஹாராஜா குழுமம் உள்ளிட்ட சிரச, சக்தி, MTV. ஊடக வலையமைப்பை சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.