ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கத்திலிருந்து தமது கட்சியை விலகிச் செல்லுமாறு எந்தவொரு தரப்பினரும் சொல்லவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான மறைந்த தர்மசிறி சேனாநாயக்கவின் 21 ஆவது நினைவு தின வைபவம் இன்று (25) கொழும்பில் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் பிறகு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் பிறிதொரு வைபவமொன்றில் கலந்து கொண்டதால் அவருக்கு கொழும்புக்கு வர முடியாமல் போனது என அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, தம்மை அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு எவரும் சொல்லவில்லை என அவர் கூறினார்.
அதுமாத்திரமின்றி, அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதை ஜனாதிபதியிடம் கேட்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.
இந்த வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.