January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிமலராஜன்: 20 ஆவது ஆண்டு நினைவு நாள்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவுநாள் இன்று.

அவரது நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு அவரது சகோதரர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். யாழ். மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சமின்றி பி.பி.சி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கும் வீரகேசரி, ராவய போன்ற உள்நாட்டு ஊடகங்களுக்கும் நிமலராஜன் பணியாற்றியிருந்தார்.

2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது, இனம் தெரியாத ஆயுததாரிகளால் அவரது வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் நிமலராஜன் கொல்லப்பட்டார்.

அப்போது அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் நிமலராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் படுகொலை நடந்து இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையிலும், கொலையாளிகள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.