இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழல் இல்லாது போகும் நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட சமூக ஊடக ஆர்வலர்கள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து, கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிற்கும் என்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் நீதி கிடைக்க ஐக்கிய மக்கள் சக்தி இறுதிவரை பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் கட்சி, இன, மத, மொழி மற்றும் பதவி நிலை பேதம் கடந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சகலருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்றிருந்தாலும், தற்போது நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சட்டம் செயற்படுவதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.