July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியல்

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தி பஸ்கள் மூலம் புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை அழைத்துச் சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரிஷாத் பதியுதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 நாட்களாக ரிஷாட் பதியுதீனை தேடிவந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று அதிகாலை தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ரிஷாட் பதியுதீனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை ரிஷாத் தலைமறைவாக இருப்பதற்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.