உலக அளவில் நீரில் மூழ்கி இறப்பது மற்றும் காயங்களுக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை உயர்வு மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத் தொடரில் நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைபடி, ஒவ்வொரு ஆண்டும் 236,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதில் 1-24 வயதுடைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக மரணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், நீரில் மூழ்கி உலகளவில் 2 இலட்சத்து 36 ஆயிரம் பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது காயங்களால் ஏற்பட்ட மொத்த உலகளாவிய இறப்புகளில் கிட்டத்தட்ட 8% என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் நீரில் மூழ்கி இறப்பது அனைத்து பிராந்தியங்களிலும் காணப்படுகின்ற போதும் இதில் பாதிக்கும் மேற்பட்டவை மேற்கு பசுபிக் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திய நாடுகளிலும் நிகழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
அத்தோடு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் பதிவான இறப்புகளில் 90% மானவை தற்செயலான இறப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 21 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்று நோயால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.