தமக்கு விரைவில் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் சிறைச்சாலைக்குள் முறையான சுகாதார வழிமுறைகள் இல்லையெனவும், தம்மில் பலர் வயதானவர்கள் என்பதுடன் சுகவீனமுற்று இருப்பதாகவும் புதிய மெகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 46 பேர் தற்போது கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் உள்ள நிலையில், அவர்களில் சிலர் 60 வயதைக் கடந்தும், சுகயீனமுற்றும் உள்ளதாக தெரியவருகிறது.
தாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்குமாறு பல தடவைகள் வலியுறுத்திய போதும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் சுகாதார வசதிகள் குறைவாக உள்ளதாகவும், கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், அவர்களை முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தமிழ் அரசியல் கைதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொது மன்னிப்பின் கீழ் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர்கள், அதே கரிசனையை தம்மீதும் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.