January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 149 பேர் கைது!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 149 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி இதுவரை 52  ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியதில் இருந்து சுமார் 46 ஆயிரம் சந்தேகநபர்கள் மீது வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அஜித் ரோஹண கூறினார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நேற்று 4,120 வாகனங்களும் 7,644 நபர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன்போது, பயணக்கட்டுப்பாடுகளை மீறி மாகாண எல்லைகளை கடக்க முயற்சித்த 150 வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்தில் முறையாக முகக்கவசம் அணியாதவர்களை கண்டுபிடிக்க நாளை முதல் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்று அஜித் ரோஹண தெரிவித்தார்.