January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வட மாகாண பிரதம செயலாளர் நியமனம்; ஜனாதிபதியின் பௌத்த- சிங்கள சிந்தனையின் வெளிப்பாடு’

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வட மாகாண பிரதம செயலாளராக தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த- சிங்கள சிந்தனையின் வெளிப்பாடு என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காக வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்;

ஒரு தமிழரின் பெயரை குறிப்பிட்டு அவரைத் தான் ஜனாதிபதி நியமிக்கப் போகின்றார் என்று பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரப்படுத்திய நிலையில், தமிழ் போட்டியாளர்களும் அரச சார்பு அரசியல்வாதிகளும் அந்த நபருக்கு எதிராக கொடுத்த புகார்களையும் வாதங்களையும் பொறுக்க முடியாமல் ஒரு சிங்கள அலுவலரை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்று பரவலாக கூறுகின்ற போதும் ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது இவ்வாறான ஒரு தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்றால் அவரின் பௌத்த-சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே இது என்று தான் நாங்கள் இந்த நியமனத்தைக் கொள்ள வேண்டியுள்ளது.

தகுதி வாய்ந்த ஆளுமைமிக்க தமிழ் அலுவலர் ஒருவரை ஜனாதிபதி நியமித்திருக்கலாம்.ஆளுமைமிக்கவர்கள் தமிழரிடையே இருக்கும் போது அமுல் பேபிகளுக்கு சார்பான தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான ஒரு நியமனத்தைச் செய்திருக்கின்றார்கள் அரசாங்கத்தினர்.

தமிழ் மண்ணில் பிரதம செயலாளராக தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.இம் மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் மொழியறியாத ஒருவரை நியமித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களை அவமதித்துள்ளார்,வஞ்சித்துள்ளார் ஜனாதிபதி.

மக்களின் மொழியறியாத ஒருவர் நிர்வாக தலைவராக இருந்தால் அவர் மற்றவர்களின் மொழி பெயர்ப்பின் அடிப்படையிலேயே கடமையாற்ற வேண்டியிருக்கும்.அவருக்கு வரும் தமிழ் கடிதங்கள் மொழி பெயர்த்த பின்னரே அவரால் வாசிக்கப்படுவன. ஆனால் அவை சம்பந்தமான பதில்களை அவர் தமிழ் மொழியில் தனது கையெழுத்துடன் அனுப்ப முடியாது. அவர் சிங்கள அல்லது ஆங்கில ஆவணங்களுக்கே கையெழுத்திடுவார். அக் கடிதங்களுடன் தமிழ் மொழி பெயர்ப்புகளை அனுப்பாமல் விட இடமிருக்கின்றது.

நான் முதன் முதலில் 197 9ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று சென்ற போது தமிழ் அலுவலர்கள் பலர் சிங்களத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்புவதை அவதானித்தேன்.அவ்வாறு செய்யாமல் தமிழில் அனுப்புங்கள் என்று ஆணையிட்டேன்.ஆணைக்குழுவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.என்னுடைய நண்பராக இருந்த என் கல்லூரியின் பழைய மாணவரான ஆணைக்குழு செயலாளரை சென்று சந்தித்தேன்.அதற்கு அவர் தந்த பதில் என்ன தெரியுமா? எங்களிடம் மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை.நாங்கள் மொழி பெயர்ப்புக்கு உங்கள் கடிதங்களை வெளியாட்களுக்கு அனுப்ப முடியாது.ஆகவே தான் உங்கள் தமிழ்க் கடிதங்கள் இங்கு மண்டிக் கிடக்கின்றன என்றார்.

16 வது திருத்தச் சட்டம் அப்போது வெளிவந்திருக்கவில்லை.அது 1988 ல் தான் வெளிவந்தது.எனினும் சட்டம் என்னவாக இருந்தாலும் தமது அடாத செயல்களை அரச அலுவலர்கள் இவ்வாறு தான் காரியமாற்றி வந்துள்ளார்கள்.அதன் பின் எமது தமிழ் கடிதங்களுடன் ஆங்கில மொழி பெயர்ப்பை அனுப்பியதன் பின்னர் தான் பதில்கள் கிடைத்தன என்று அவர் மேலும் தெரிவித்தார்.