November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடு இராணுவ ஆட்சியின் பக்கம் பயணிப்பதை தடுக்க வேண்டும்’: ஜேவிபி

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் இராணுவ அடக்குமுறையைக் கையாளும் நிலை காணப்படுவதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் முன்னரைவிட மிக மோசமான முறையில் குடும்ப ஆட்சி இப்போது வலுப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற வாக்குறுதிகளை வழங்கிய ராஜபக்‌ஷவினர் இன்று அதனைத் தவுடுபொடியாக்கிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் இனவாத அரசியலை அரசாங்கம் கையில் எடுத்து, செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டில் மாற்றமொன்று தேவை என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய மாற்றத்திற்கான அணியொன்றை உருவாக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தாம் முன்னெடுத்து வருகின்றதாகவும், அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.