இலங்கையில், இணைய வழி ஊடான சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பகுதியில் 72 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த குற்றங்களின் எண்ணிக்கையானது ஆண்டு இறுதிக்குள் சுமார் 144 ஆக பதிவாகலாம் எனவும் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதான பதிரண தெரிவித்தார்.
பெரும்பாலான சைபர் குற்றங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் ஹோமாகம பகுதிகளில் பதிவாகியுள்ளதாகவும் அதற்கான காரணங்கள் குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
2020 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை மாற்றம் அடைந்தது. 70% சைபர் குற்றங்கள் கொழும்பு நகரத்திற்கு வெளியேயும், 30% மானவை கொழும்பிலும் பதிவாகியுள்ளன.
“சைபர் குற்றங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பரவியுள்ளன.இணையம் ஊடான பாலியல் வன்முறைகள் 80% ஆக உயர்ந்துள்ளது, பாலியல் அல்லாத சைபர் குற்றங்கள் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 20% ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டில் 51 சைபர் குற்றங்களும் 2018 இல் 43 சைபர் குற்றங்களும், 2020 ல் 152 குற்றங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சைபர் பிரிவை 2019 முதல் இயக்கி வருகிறது.ஆனால் 2020 ஒக்டோபர் முதல் இயங்கிவரும் சைபர் கண்காணிப்பு பிரிவு குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு தெரியாமல் 52 சதவீத வழக்குகளை கண்காணித்து பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.