வட மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் உறுப்பிர்கள் மற்றும் அவைத் தலைவர் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளனர்.
வட மாகாணத்துக்கான பிரதம செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஜானம் தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போதே வட மாகாண பிரதம செயலாளரின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பத் தீர்மானித்ததாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஜானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழரின் பெயரைக் குறிப்பிட்டு அவரைத்தான் ஜனாதிபதி நியமிக்கப் போகின்றார் என்று பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரப்படுத்திய நிலையில், தமிழ் போட்டியாளர்களும், அரசசார்பு அரசியல்வாதிகளும் அவருக்கு எதிராகக் கொடுத்த புகார்களைப் பொறுக்க முடியாமல், ஒரு சிங்கள அலுவலரை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்று பரவலாகக் கூறுகின்ற போதும், ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது இவ்வாறான ஒரு தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்றால் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண பிரதம செயலாளராக ஒரு தகுதிவாய்ந்த, ஆளுமைமிக்க தமிழ் அலுவலரை ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் மண்ணில் பிரதம செயலாளராகத் தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் மொழியறியாத ஒருவரை நியமித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களை ஜனாதிபதி அவமதித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.