November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் அவசியம்’

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய,வீட்டு வேலைக்கு அமர்த்தப்படவுள்ள மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் அனைவரும் தாம் வசிக்கும் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் அவசியமென மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத் திட்டமொன்று இல்லாதமையினாலேயே தற்போது அதிகளவிலான சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுகிறார்கள்.

ஆகவே, இந்த விடயத்தை கருத்திற் கொண்டு அமைச்சு என்ற ரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இதற்கமைய,யாரேனும் ஒருவர் வீட்டு பணிக்காக அமர்த்தப்படுவாராயின், அவர்கள் கிராம உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான உத்தியோகத்தர் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் பிரதேச செயலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டால், சிறுவர்களை வேலைக்கமர்த்தும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சுட்டிக்காட்டினார்.