மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சரின் யாழ்.செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
பிரதேச மக்களில் பெரும்பாலானவர்களின் கருத்தினை கடற்றொழிலாளர் சங்கங்கள் பிரதிபலிக்கின்றன என்ற வகையிலும், மக்களின் தற்போதைய பொருளாதார நிலைமையையும் கருத்தில் கொண்டு,கடற்றொழில் திணைக்களத்தினால் வரையறுக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும், மக்களின் நலன்களின் அடிப்படையிலேய தன்னுடைய தீர்மானங்கள் அமையும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்,வெளிச்சம் பாய்ச்சுதல்,குலை போட்டுப் பிடித்தல் போன்ற தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை முற்றாக தடை செய்வதற்கு கடற்றொழிலாளர் சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற படகுகள்பதிவு செய்யப்படும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,40 குதிரை வலுவிற்கு உட்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதேவேளை,நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவை வலைப் படகுகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட பிரதானிக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.