January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை’

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஜனாசா குறித்து கோஷம் எழுப்பினேன்.இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் மரணமான சிறுமி குறித்து நீதி நிலை நாட்டபட வேண்டும் என பேசுகிறேன்.அது குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன.ஆனால் யாராக இருந்தாலும் அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.சாணக்கியன் தெரிவித்தார்

மட்டக்களப்பு- அம்பாரை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள், சுருக்கு வலைகள் தொடர்பில் மாளிகைக்காடு அந்நூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் பலர் உள்ள நிலையில்,என்னையும் இங்கு கலந்து கொண்டிருக்கும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரனையும், பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனையும் அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

பல தடவைகள் அரசுடனும் அமைச்சர்களுடனும் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன்.ஆனால் எவ்வித பயனுமில்லாமல் இருக்கும் இவர்களுக்கு பாடம் புகட்டும் நடவடிக்கையாக அம்பாறை- கல்முனை வீதியை அரை மணித்தியாலமாவது முடக்கி மீனவர்களின் பிரச்சினையை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.முடக்கி உங்கள் சக்தியை காட்டுங்கள்.

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றுமேயில்லை.அதை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள்.அந்த செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. பெயர் பலகையில் மாற்றம் வருமே தவிர, தமிழர்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

இது தொடர்பில் நான் பெரிதாக பேசுவதில்லை என்கிறார்கள்.இதில் பேச ஒன்றுமில்லை.இதனை வைத்து கொண்டு அரசியல் மட்டுமே நடக்கிறது.சந்தர்ப்பம் வரும் போது மீனவர்களின் பிரச்சினையை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவேன்.கல்முனை பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என்று நான் மட்டுமே பாராளுமன்றத்தில் பேசினேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.