January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பல பாகங்களிலும் பலத்த காற்று வீசும்!

இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் இடைக்கிடையே மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம், காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும், புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களும் கொந்தளிப்பாகவும், காற்றின் வேகம் அதிகளவிலும் காணப்படும்.

இதனிடையே, காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது 70 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 – 70 வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாளைய தினம் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.