July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 14 பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில்  டெல்டா வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கோட்டை, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, இரத்மலானை, கல்கிஸை, கெஸ்பேவ ஆகிய பகுதிகளில் டெல்டா வைரஸ் திரிபு பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கம்பஹா மாவட்டத்தில் ராகம, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பேருவளையிலும், காலி, மாத்தறை, தம்புள்ளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் டெல்டா கொவிட் திரிபுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமன்த ஹேரத் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 68ஆக பதிவாகியுள்ளன. ஆனால் அதிகமான மக்கள் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் தான் இத்தனை பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையான பரிசோதனையில் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும்.

எனவே, கொவிட் வைரஸினால் பாதிக்காமல் இருக்க அனைவரும் நல்ல சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.