மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மாத்தறையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
“மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கபடாவிட்டாலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க கொவிட்- 19 தேசிய செயலணி அனுமதியளித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கப்பட்டதும், முழுமையான போக்குவத்து வசதிகளை வழங்குவோம்.
சிலவேளை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீடிக்கப்பட்டாலும், சில பஸ் வண்டிகளுக்கு போக்குவரத்தில் ஈடுபட சந்தர்ப்பமளிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத பொதுப் போக்குவரத்து சேவைகள், கடந்த ஜூலை 14 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அத்தியாவசிய சேவைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய கொவிட் திரிபுகள் கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து கடந்த 17 ஆம் திகதி முதல் முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெரும்பாலானோருக்கு இரு வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்தி முடிப்பதன் அடிப்படையில், மீண்டும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியுமென கொவிட் செயலணி கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.