February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனின் கட்சி விளக்கம்

மலையக சிறுமி இஷாலினியின் மரணம் தமக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை தாமும் வலியுறுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தலைமையாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறுமியின் மரணம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்ககப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் இந்த மரணத்தின் உண்மைகள் தெரியவரும் வரையில் சகலரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயத்தில் சில ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்தியுள்ளதாகவும், அவர் 16 வயதிற்கு பின்னரே வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தை பேசுவது தவறில்லை. அந்த மக்களின் பிரதிநிதிகள் நிச்சயமாக அவர்களுக்காக பேசவேண்டும் என்பதோடு, சம்பவத்தின் உண்மை கண்டறியப்பட சகலரதும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

“வெறுமனே போராட்டங்களை செய்வதில் அர்த்தமில்லை. உண்மையில் இந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதையே ரிஷாடின் குடும்பத்தாரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதற்கு அவர்கள் பூரண ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரிஷாட் எம்.பியின் மனைவி, அவருடைய தாய் தந்தையரின் கூற்றின் படி, சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ள அறையிலே அவர் இரவு நித்திரைக்கு சென்றதாகவும், அதிகாலையில் கூக்குரல் கேட்டதாகவும், அங்கு சென்று பார்த்த வேளையில் சிறுமியின் உடலில் தீ பற்றிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் உடனடியாக சிறுமியை காப்பாற்ற, வீட்டின் பின்னாலுள்ள நீர் தாங்கியில் அமிழ்த்தியதாகவும், அதற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றதாகவும் கூறியுள்ளனர்.

அதேபோன்று, அந்த சிறுமியும் ஒரு சில சந்தர்பங்களில் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தனக்கு குளிர்ந்த நீர் வேண்டுமென சிறுமி கேட்டுள்ளார். ஆனால், ஏன் தீ வைத்துக்கொண்டாய் என கேட்டபோது, அதற்கு எந்தவித பதிலையும் சிறுமி கூறவில்லை என்றும் ரிஷாட் குடும்பத்தார் கூறியுள்ளனர்”

என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.