இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணத்தின போது கொவிட்-19 கட்டுப்பாட்டு வளையத்தை மீறி இரவு வேளையில் வீதியில் நடமாடிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகிய இலங்கை அணி வீரர்கள் மூவருக்கும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாடியது.
இதன்போது, இலங்கை அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூவரும் கொவிட்-19 கட்டுப்பாட்டு வளையத்தை மீறி இரவு வேளையில் வீதியில் நடமாடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இதனையடுத்து, உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்ட மூன்று வீரர்களுக்கும் விசாரணைகள் நிறைவடையும் வரை போட்டித் தடை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், குறித்த வீரர்களை விசாரிப்பதற்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்று இலங்கை கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்டது.
இதன்படி அந்தக் குழுவினர் தற்போது விசாரணைகளுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, விசாரணைகளுக்கு முகங்கொடுக்க முன்னர் குறித்த மூன்று வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வீரர்களுக்கு எதிராக மிக விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.