கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு இதுவரையில் ஒரு கோடியே 21 இலட்சத்து 59 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி 91 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளும், 15 இலட்சத்து 10 ஆயிரம் மொடேனா தடுப்பூசிகளும், 12 இலட்சத்து 64 ஆயிரம் அஸ்டசெனிகா தடுப்பூசிகளும், ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகளும், ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 830 பைசர் தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இதுவரையில் 15 ஆயிரத்து 460 மில்லியன் ரூபா (77.3 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவழிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீனா இதுவரையில் 11 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. மேலும் 16 இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் அன்பளிப்பாக கிடைக்கவுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்கா 15 இலட்சத்து 100 மொடேனா தடுப்பூசிகளையும், இந்தியாவும் ஐந்து இலட்சம் அஸ்டா செனிகா தடுப்பூசிகளையும், ஜப்பான் 14 இலட்சத்து 70 ஆயிரம் அஸ்டா செனிகா தடுப்பூசிகளை வழங்கவுள்ளன.
இந்நிலையில் இலங்கைக்கு இதுவரை கிடைத்துள்ள தடுப்பூசிகளில் 72 வீதமானவற்றை பணம் கொடுத்தே பெற்றுக்கொண்டுளோம் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.