
கறுப்பு ஜுலை நினைவையொட்டி வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் வாயினை கறுப்பு துணியால் கட்டியிருந்தனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்காதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து முடிவு சொல், ஜனநாயக போராட்டங்களை நசுக்காதே, கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை மீளப்பெறு, கிசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணையை நடத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்,பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, திட்டமிட்ட நில அபகரிப்பை நிறுத்து, ஊடக அடக்கு முறையை நிறுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.