November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை’; சுமந்திரன் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது.ஆகவே தமிழ் மக்களை பொறுத்த வரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையில் சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை (22) எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

‘அரசுக்கு எதிராக தற்சமயம் இடம்பெறுகின்ற போராட்டங்களை கடந்த பெப்ரவரி மாதம் நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம்.ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது. அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவசரமாக மக்களிடம் இருந்து செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது.

நாங்கள் எந்த நாட்டுக்கும் சார்ந்தவர்களும் அல்ல,எதிரானவர்களும் அல்ல.ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பொறுத்தளவில் எங்களுடைய அரசியல் பிரச்சினை சம்பந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பில் சர்வதேச உடன்படிக்கையை 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது.அது முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

அதன் காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம்.இந்திய அரசும் தொடர்ச்சியாக அதிலே உள்ள விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லி வருகின்றது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம்.

அதேவேளையில் சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைப்பதை விட ,மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற,மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடயம்.

ஆனால் சீனாவை பொறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடயம்.ஒரு கட்சி ஆட்சி,மாற்று கருத்துகளுக்கு இடமில்லை,மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற நிலைமை தான் சீனாவினுடைய நிலைப்பாடு.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 ஆம் ஆண்டிலிருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்களை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையில்,ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையில் சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை.