July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை கண்டனத்துக்குரியது’

“பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கத் தேவையில்லை.சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தலாம் என்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கின்றோம்.இந்தச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சட்டவல்லுநர்கள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஏன் சர்வதேச நாடுகள் உட்பட பல தரப்புக்கள் இந்தச் சட்டத்தால் ஏற்பட்ட கடும் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இதை நீக்குமாறு வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.

ஏற்கனவே வீழ்ந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என புதிய நிதி அமைச்சர் நாட்டுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.இந்தச் சட்டத்தை நீக்காது விட்டால் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை நீக்கப்பட மாட்டாது.எமது ஏற்றுமதியும் அந்நிய செலாவணியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.அப்படியான அபாய நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் பரிந்துரையை ஜனாதிபதி ஆணைக்குழு வழங்குவது எதற்காக?

ஜனாதிபதியால் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கத் தேவையில்லை என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது வேலிக் கட்டைக்கு ஓனான் சாட்சியாக அமைவது போல் இருக்கின்றது.இது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான்.

இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தால் எமது தமிழினம் சொல்லொணா கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கின்றது.இன்றும் பல தசாப்தங்களாக விசாரணையோ, வழக்குகளோ, பிணையோ இன்றி பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலம்மிக்க இளைய சமுதாயம் இந்த நாட்டை விட்டு குடிபெயர்வதற்கும் இனக் குடிப்பரம்பலில் சிதைவை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

சட்டவிரோதமான கைதுகள், காலவரையறை அற்ற தடுப்பு, பிணை வழங்காமை, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை என்று அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவே அமைந்திருக்கின்றது.நியாயமான எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து எமது இளம் சமுதாயத்தை வகை தொகையின்றி கைது செய்ததோடு, சித்திரவதைக்கும் உள்ளாக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது.மாறாக எம்முடைய போராட்டத்தை தடுக்கவோ நிறுத்தவோ முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று தமது தோல்விகளை மறைப்பதற்கும் தமக்கு எதிராக ஜனநாயக போராட்டத்தை நடத்த முற்படுபவர்களை கைது செய்வதற்கும் அரசியல் பழிவாங்கல்களை அரங்கேற்றுவதற்குமே இந்தச் சட்டம் பயன்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்.

ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படாத,போற்றப்படாத இந்த அரசில், இந்தச் சட்டத்தில் சிறிய மாற்றங்களின் மூலம் ஜனநாயகத்தை பேணிவிடலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழு சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

அப்பாவி மக்களைப் படுகொலை செய்து நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றார்கள். அதேவேளை தம்முடைய இனத்திற்காகவும் மக்களுக்காகவும் நியாயமாக குரல் கொடுப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதற்கு வழிவகுக்கும் அரசுக்குப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பரிந்துரைக்கும் மாற்றங்கள் எந்த விதத்தில் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தரும் ?

இதே அரசில் பதவி வகித்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கடந்த காலங்களில் அதே சட்டத்தின் கீழ் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டதை அல்லது தடுத்து வைக்கப்பட்டு வருவதை இந்த நாடு நன்கு அறியும்.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிலும் அராஜகத்தையும் சர்வாதிகாரத்தையும் நிலைநிறுத்த பயன்படும் இந்தச் சட்டத்தில், எந்த மாற்றங்களும் இதன் அடிப்படை நோக்கத்தை சீர்செய்து விடப்போவதில்லை.ஆகவே,முற்றாக இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

அனைத்துத் தரப்பினரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருமித்து செயலாற்ற கோருகின்றோம். அதிகாரங்களுக்கும் அற்ப சலுகைகளுக்காகவும் இந்த சட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குபவர்கள் அறிந்தோ அறியாமலோ உங்களுக்கும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் சிதை மூட்டுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.