சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார பரிசோதகர்கள் முடிவு செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, நாளை (23) முதல் திருமண மண்டபங்களின் அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அனேகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக திருமண விழாக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது.
அத்தோடு எதிர்காலத்தில் இதனை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மண்டபங்களின் அமைப்பாளர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.