July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொடர்னா தடுப்பூசி குறித்து போலிப் பிரசாரம்; பொலிஸார் விசேட விசாரணை

மொடர்னா தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத் தளங்களில் போலிப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கண்டி வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியினால் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கண்டியில் மொடர்னா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும், அதில் நனோ தொழில்நுட்பம் உள்ளடங்கியுள்ளதாகவும் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மொடர்னா தடுப்பூசி தொடர்பில் போலியான பிரசாரங்களை மேற்கொள்வதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படும் என மருத்துவ அதிகாரி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கண்டி பொலிஸ் அதிகாரியின் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.