நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் கொவிட் நோய்த் தொற்று காரணமாக மோசமாக நோய் வாய்ப்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு தடுப்பூசி கூட ஏற்றிக் கொள்ளாதவர்கள் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது, நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கு தேவையான தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களில் அரசாங்கம் வெற்றிகரமாக தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.எனினும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வருபவர்களின் எண்ணிக்கையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் தரவுகளின் படி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை கூட பெற்றிருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களும் பல்வேறுபட்ட நோய் நிலைமைகளை உடையவர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டு தம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி வழங்குவதன் முக்கிய நோக்கம் மக்களின் உயிரை பாதுகாப்பதாகும் எனவும் சுகாதார அமைச்சர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.