தவறான இணையத் தளம் ஒன்றில் தமது தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்
பேஸ்புக்கிலிருந்து பதிவிறக்கம் செய்யும் சிறுமிகளின் படங்களைப் பயன்படுத்தி பல்வேறு தவறான செயல்களை குறித்த இணையத்தளத்தை நடத்தி வரும் சில ஆண்கள் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ள அவர், தமது தொலைபேசி எண் பேஸ்புக்கிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு அழகான பெண்ணின் தொடர்பு எண்ணாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா கூறினார்.
இவ்வாறு பலரின் தொலைபேசி இலக்கங்கள் பேஸ்புக் கணக்கிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுஅழகான சிறுமிகளின் படங்களை தொடர்புபடுத்தி இணையத்தளத்தில் சிறுமிகள் சந்தைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர் ஒருவரிடமிருந்து தமக்கு அழைப்பு வந்ததையடுத்து இந்த மோசடி தொடர்பில் தாம் அறிந்து கொண்டதாக அவர் கூறினார்.
தன்னைப்பற்றி அறிந்து கொண்டதன் பின்னர் இளைஞர் தன்னிடம் மன்னிப்பு கோரியதாகவும் மேலும் பொலிஸில் புகார் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நோய் தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை மற்றும் இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்று நோய்க்கு மத்தியில் இலங்கை ஆண்கள் கடுமையான பாலியல் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம்.
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படுவதுடன், சிறுவர்களுக்கு “பிழையான தொடுகை” மற்றும் “நல்ல தொடுகை” கூறித்து கற்பிக்கப்பட வேண்டும் என்று ஹிருணிகா பிரேமச்சந்திர கூறினார்.