October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (22) தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

நியூசிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகராக மைக்கல் எட்வர்ட் எப்பல்டன்,கியூபா மக்கள் குடியரசின் தூதுவராக அன்ட்ரஸ் மாசெலோ கரிடோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவே இதுவரையில் இலங்கை விவகாரங்கள் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டு வந்தன.இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்தி, இலங்கையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் உயர்ஸ்தானிகராக கடமையாற்ற கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக,மைக்கேல் எட்வர்ட் எப்பல்டன் தெரிவித்தார்.

ஐ.நா.பொதுச் சபையில், இலங்கைக்கு கியூபா அளித்துவரும் ஆதரவை, ஜனாதிபதி இதன்போது பாராட்டிய அதேவேளை, இலங்கைக்கும் தங்களது நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்கு தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக,புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன,ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர,வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, தலைமை நெறிமுறை அதிகாரி துஷார ரொட்ரிகோ, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டி ஆராச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.