July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமி மரண விவாகாரம்: தாய் உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் அவரது தாய் அடங்கலாக 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட கொழும்பு தெற்குப் குற்றவியல் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த இரண்டு விசேட விசாரணை குழுக்கள் நேற்று டயகம பகுதிக்கு சென்று விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இதன்போது சிறுமியின் தாய், தந்தை சகோதரன், சகோதரி மற்றும் சித்தப்பா ஆகியோரிடம் பொலிஸார் சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம் குறித்த சிறுமியை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்ற தரகரிடம் இன்று பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.

குறித்த சிறுமியை ரிஷாட் பதியுதீன் இல்லத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் மேலும் இரு பெண்கள் வீட்டு வேலைக்காக அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அந்த இரு பெண்களது வாக்குமூலங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் 21 வயதுடைய யுவதி. மற்றைய பெண் 32 வயதுடையவராவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சிறப்பு பொலிஸ் குழுவுக்கு மேலதிகமாக, நுவரெலியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் டயகம பொலிஸாரும் ஹிஷாலினியின் மரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இதனிடையே, கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் குறித்த சிறுமி கொழும்பு தேசிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.