ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி மன்னார் மற்றும் வவுனியா நகரங்களில் இன்று ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன்படி மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பங்களிப்புடன் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்போது மன்னார் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
குறிப்பாக வித்தியாவை அடுத்து ஹிசாலினியா?, சிறுவர் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்,பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு விரைவாக நீதி வழங்குங்கள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்போம்,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை வவுனியாவில் நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வவுனியா காமினி மாகவித்தியாயலத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் கொழும்பில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரிநிற்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதேவேளை நாட்டில் பெண்களும் சிறுவர்களும் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும். ஹிஷாலினி போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.