May 29, 2025 13:48:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வதேச விமான நிறுவனங்கள் சில இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக பேச்சு’

சில சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன.தற்போது 32 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளில் ஈடுபட்டு வருவதுடன்,மேலும் புதிய நான்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரான்ஸ் விமான நிறுவனம் மற்றும் மத்திய கிழக்கு விமான நிறுவனமொன்றும் இலங்கையுடன் விரைவில் விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. கடுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கி விமான சேவைகளை ஆரம்பிக்க சம்மதித்துள்ளன.

இதேவேளை, ஓமானுக்கு சொந்தமான சலாம் விமான நிறுவனம் மத்தள சர்வதேச விமான நிலையத்துடன் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அத்துடன், சினமன் விமான நிறுவனம் இலங்கை முழுதும் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களை உள்ளடக்கிய விமான சேவைகளை ஆரம்பிக்க உடன்பட்டுள்ளது.

மேலும், புதிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையை விமான சேவைத் துறையில் ஒரு கேந்திர நிலையமாக மேம்படுத்துவதுடன், விமான சேவையில் சாதகமான போட்டியை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் விமான நிலையங்களின் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதே சுற்றுலா ஊக்குவிப்பு பிரசாரத்திற்கு ஏற்ப விமான நேரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்துவதால்,எதிர்காலத்தில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றிற்கு ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.