July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சகல தடுப்பூசிகளிலும் 90 வீதத்திற்கும் அதிகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன; வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர

சினோபார்ம் தடுப்பூசி 95 வீத நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதை போன்றே, இலங்கையில் பயன்படுத்தப்படும் சகல தடுப்பூசிகளிலும் 90 வீதத்திற்கும் அதிகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. ஆகவே தடுப்பூசிகளின் தரத்தில் எம்மால் குறை கூற முடியாது என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

மேலும்,டெல்டா வைரஸ் நாடளாவிய ரீதியில் எவ்வாறான தாக்கத்தை செலுத்திக் கொண்டுள்ளது என்றோ அல்லது டெல்டா வைரஸ் தொற்றாளர் நாட்டில் எத்தனை பேர் உள்ளனர் என்பதையோ எம்மால் உறுதியாக கூற முடியாது. பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொண்டால் மட்டுமே இதன் அச்சுறுத்தல் நிலை என்னவென்பது வெளிப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பல்வேறு தடுப்பூசிகள் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இவை எந்தளவு சாதகத் தன்மையை வெளிப்படுத்துகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். சினோபார்ம் தடுப்பூசி 95 வீதமான சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்துவதாக எமது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த வேளையில் இருந்தே இந்த ஆய்வுகளை மேற்கொண்டோம். அதேபோல் ஏனைய தடுப்பூசிகளுக்கும் இதே ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை ஆரம்ப இரத்த பரிசோதனைகளின் மூலமாக முன்னெடுக்கப்பட்டது.

ஒருவர் இருவருக்கு அல்ல, ஆயிரக்கணக்கான நபர்களின் இரத்த மாதிரிகளில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாம்,இரண்டாம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட சரியான இடைவெளிகளில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உடலில் பல்வேறு மூலக்கூறுகளில் இது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ஒன்றிணைந்த அதிக தரவுகளை கொண்டே நாம் பரிசோதனைகளை கையாண்டோம்.

உண்மையில் குறைபாடுகளை கண்டறியவே இவை முன்னெடுக்கப்பட்டன. ஆனால் சாதகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன என அவர் மேலும் கூறியுள்ளார்.